தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சென்ற ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து நடந்து வந்தது. அதன்படி நேற்றைய விவாதத்தின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “வரும் கல்வி ஆண்டிலிருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பிறகு பாடங்கள் நடத்தப்படும். இன்றைய காலக்கட்டத்தில் கவனச் சிதறல்கள் அதிகரித்து இருக்கிறது. மனஅழுத்தத்தில் உள்ள குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது என்பது தவறான ஒன்று. இவ்விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் பொறுப்பல்ல. பள்ளிகள் -பெற்றோர்கள் -அரசு ஆகியோருக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ மாணவர்கள் தொந்தரவு தந்தால் உடனே நீக்கப்படுவார்கள்.
அவ்வாறு நீக்கப்படும் மாணவர்களின் TC-யிலும், Conduct Certificate-லும் எதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதையும் குறிப்பிடுவோம். அதேபோன்று ஆசிரியர்களிடம் மனரீதியாக மற்றும் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடந்துகொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்போன் எடுத்து வரக்கூடாது. இதனை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த அறிவிப்பானது முற்றிலும் தவறானது என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேவநேயன் தன் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இது தவறான அறிவிப்பு.
மாணவர்கள் தவறு செய்தால் அதனை சரிசெய்வது தான் நல்லது. அதற்காக தண்டனை வழங்குவது சரி கிடையாது. இதன் காரணமாக குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள். அவ்வாறு விலகலான குழந்தைகள்தான் பல வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை குழந்தைகளே ஆவர். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது.? அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும்.?
தமிழ்நாட்டில் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் மேல் முழுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அரசாணைஎண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். எனவே தயவுசெய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். ஆகையால் குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.