செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்த நபரிடம் தொகை ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொடூர் கிராமத்தில் அய்யாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு கடந்த மாதம் 16-ந் தேதியன்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவை என்று இருந்தது. இதனை பார்த்த பாலசுப்பிரமணியன் இதுகுறித்த விவரம் கேட்பதற்காக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், பாலசுப்பிரமணியனிடம் செல்போன் கோபுரம் அமைக்க முன்பணம் ரூ.20 லட்சமும், மாத வாடகை ரூ.25 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாலசுப்ரமணியன், அந்த நபர் கூறியபடி அவரது வங்கி கணக்கிற்கு கூகுள்பே மூலம் ரூ.1,14,999-ஐ பணியை செலுத்துவதற்கான கட்டணமாக அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் பாலசுப்பிரமணியனிடம் மேலும் பணம் கட்ட சொன்னதால் அவர் தன்னிடம் பணம் இல்லையென்றும், தான் இதுவரை செலுத்திய பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எதுவும் தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் விழுப்புரம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,14,999-ஐ மீட்டு வங்கி கிளை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.