தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுப்பை எடுக்காதவர்களுக்காக ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்கான சம்பளமானது, எவ்வித பிடித்தமும் இல்லாமல் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இதனை 2 ஆண்டுகளுக்கு சேர்த்து ஒரு மாத கால ஊதியமாக பெற்றுக் கொள்கின்ற வசதியும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிறைய நிதி உதவி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் ஈட்டிய விடுப்பு நாட்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து 20221 -22 ஆம் நிதியாண்டில் ஈட்டிய விடுப்புக்கு ஊதியம் பெறுவதை நிறுத்தி வைத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சியில் இருந்த அரசு ஊழியர்கள், புதிய நிதியாண்டில் இருந்து (2022 -23) மீண்டும் இந்த சலுகையை பெறலாம் என்ற ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது ஆசிரியர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்யும் அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், துறை இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறையானது, தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பினால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.