மதுரையில் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு தாசில்தார் பட்டா போட்டு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்றையதினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாவினிப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம், மைதானம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.
அதன்படி தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பள்ளிக்கூடம் மைதானம் தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு பொது இடமானது ஒதுக்கப்பட்டது. ஆனால் அதனை மறைத்து அந்த பொது இடங்களை தனிநபர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு மேலூர் தாசில்தார் பட்டா போட்டு விற்று விட்டதாகவும், இதைக் கேட்கப் போனால் கொலைமிரட்டல் விடுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா போட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போடப்பட்ட பட்டாவை ரத்து செய்து அதை பொது பணிகளுக்கு பயன்படுத்த கோரியும் ஊர்மக்கள் வலியுறுத்தி கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அரசு நிலத்தை தனிநபர்களுக்கு தைரியமாக தாசில்தார் விற்று பட்டா போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.