5 ஆயிரம் ரூபாய்க்கு தாய் தனது ஆண் குழந்தையை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்தரை கொள்ளுமேடு பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5-ஆம் தேதி சந்திராவுக்கு அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தம்பதியினர் தவித்தனர். நேற்று சந்திரா குழந்தையின்றி இருந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சந்திராவிடம் குழந்தை எங்கே எனக் கேட்ட போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனை அடுத்து தம்பதியினர் தங்களது குழந்தையை காணவில்லை என மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்திரா தன்னுடன் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் ஜெயந்தி என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றதாக சந்திரா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.