Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதன்முறையாக… “வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி”… புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்…!!!

தமிழகத்தில் முதன்முறையாக வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை உட்பட நிறைய வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு ஒரு புலிக்குட்டி உடல்முழுவதும் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி காயத்துடன் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி வனத்துறையினர் அந்த குட்டியை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஒரு வார சிகிச்சைக்குப் பின் அந்த புலிக்குட்டியை தனி கூண்டில் அமைத்து பராமரித்து வருகின்றனர். தற்சமயம் அந்த புலிக்குட்டி  பூரண குணமடைந்து நன்றாக உணவு சாப்பிட்டு எடையும் அதிகரித்து நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, மானாம்பள்ளி வனச்சரகத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி வயது எட்டு மாதம். 90 கிலோ எடை இருந்தது. முள்ளம் பன்றி வேட்டையாடியதால் அதன் உடல் முழுவதும் முள் குத்தப்பட்டு இருந்தது. உடலிலும் அதிகளவில் முட்கள் இருந்த நிலையில் படிப்படியாக சிகிச்சை அளித்ததில் அந்த புலிக்குட்டி நல்ல ஆரோக்கியமாக 16 மாதம் வயதான அதன் எடை 118 கிலோவாக உயர்ந்துள்ளது.

பொதுவாக புலிக்குட்டி அதன் தாயிடம் இருக்கின்றபோது, வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி வேட்டையாட தெரியாது என்பதால் தமிழகத்திலேயே முதன்முறையாக கூண்டுக்குள் வைத்து இந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி அருகில் மந்திரமடம் என்ற இடத்தில் ரூ 75 லட்சத்தில் பத்தாயிரம் சதுர அடிக்கு கம்பி வேலி மூலம் கூண்டுக்குள் அமைக்கப்படவுள்ளது. அந்த கூண்டிற்குள் இந்த புலிக்குட்டியை வருகின்ற 16ஆம் தேதி முதல் விடப்பட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கலந்து கொள்ள இருக்கிறார். முதலில் புலிக்குட்டி எளிதாக வேட்டையாடி பழகுவதற்கு முதலில் அந்த கூண்டிற்குள் முயல், காட்டுப்பன்றி விடப்பட்டு அதன்பின் மான் விடப்படும் என்றனர். அதன் தேவைக்கு ஏற்ப வேட்டையாடி சாப்பிடுகின்ற அளவுக்கு விலங்குகளை அந்தக் கூண்டுக்குள் விட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த கூண்டு இருக்கின்ற இடத்தில் மற்ற விலங்குகள் வருவதை தடுப்பதற்கு தனி குழு அமைக்கப்பட உள்ளது .

மேலும் அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் அந்த கூண்டை சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஆறு மாதம் இந்த கூண்டுக்குள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின் அதன் உடல்நிலை, வேட்டையாடும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு உயர் அதிகாரிகள் அனுமதியுடன் அந்தக் குட்டியை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

Categories

Tech |