வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவன் குமார் மற்றும் அவரது உறவினர்களான அமித், சவுரவ்குமார் ஆகியோருடன் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவன்குமார் செல்போன் மூலம் தனது உறவினர்களை தொடர்பு கொண்டு அமித் தன்னிடம் தகராறு செய்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.
அதன்பிறகு பவன்குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது பவன்குமார் உட்பட இரண்டு பேரையும் காணவில்லை. மேலும் ரமேஷ் கட்டி வரும் வீட்டு சுற்று சுவரில் ரத்த கரை படிந்திருந்தது. இதுகுறித்து பவன்குமாரின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்தக்கறை படிந்த இடத்தை தோண்டி பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவன்குமார் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறையினர் பவன் குமாரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடீரென ஏற்பட்ட தகராறில் அமித் பவன்குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் அமித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.