சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சென்ற வருடம் தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது. இதனையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்விக் கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் இருவேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், பிற அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது போன்று இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறி கோரிக்கை விடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல் சென்ற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் சென்ற ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழகம் பதிவாளர் சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து உடனே காலி செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இதனை ஏற்க மாணவர்கள் மறுத்துவிட்டனர். அதன்படி மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்திலுள்ள கார் ஷெட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ள சூழ்நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை உடனே திறப்பதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி விடுதி இன்று மாலை முதல் செயல்பட தொடங்கும் என்பதால் மாணவர்கள் உடனே மருத்துவக் கல்லூரிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.