நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “இலங்கையில் நிலவியுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப் படுகொலையாளார்களான ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டு, அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் தீவைத்து எரிக்கப்படும் காட்சிகள் தினசரி வெளியாகி வருகிறது. சிங்கள இனவாதம் மற்றும் பௌத்த மதவாதம் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது.
மக்களளின் நலனில் அக்கறை செலுத்தாமல் மதஇன வெறியை ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் வாயிலாக மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம் ஆகும். அதற்குத் துணைபோன அப்பாவி சிங்கள மக்கள் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். ஒரு நாட்டில் உண்பதற்கு உணவும், குடிக்க நல்ல நீரும் கிடைக்காதபோது அங்குப் புரட்சி ஏற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு நிகழ்காலச் சாட்சியாக இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளது. இன்று இலங்கை நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையானது நாளை இந்தியாவிற்கும் ஏற்படலாம்.
ஆகவே இனி இந்திய பெருநாட்டை ஆளும் மோடி அரசாங்கம் மதத்தின் வாயிலாக மக்களைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியையும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து அவர்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு போன்றவற்றை சிதைத்து இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரும் கொடுங்கோன்மையையும் கைவிட வேண்டும். இல்லையெனில் ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்திய இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
அத்துடன் தற்போது சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 2 லட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்த காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன் வரக்கூடாது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் வாயிலாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.