Categories
மாநில செய்திகள்

“வனவிலங்கு சரணாலயம்”…. பாக்கம்-கெங்கவரம் பகுதியில்…. அரசு போட்ட அதிரடி பிளான்….!!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் பாக்கம்-கெங்கவரம் பகுதி 1897ஆம் வருடம் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. இந்த காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். அதாவது 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு உடைய இந்த காட்டில் சிறுத்தை, கரடி, அரிய வகை சிலந்திகள், அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எரும்பு தின்னி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்ற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் இருப்பதாக உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்து உள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ஆர்.ராமன், எஸ். விமல்ராஜ் போன்றோர் செஞ்சி அருகில் பாக்கம் மலைகளில் சென்ற 8 மாதங்களாக வனஉயிரினங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அவர்கள் அரியவகை சிலந்தி பூச்சியை கண்டறிந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த குழுவினர் சானி வீரன், மலை பூவரசு ஆகிய 21 வகை செடிகள், மரங்கள், மூங்கில் குழிவிரியன் என்ற அரியவகை பாம்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்து இருக்கின்றனர். கடந்த 2019ஆம் வருடம் இந்த பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது பற்றி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் தோமரிடம் கேட்டபோது, “பாக்கம் மலைப் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முன்பே திட்டமதிப்பீடு அனுப்பபட்டு உள்ளது. இந்த வனப் பகுதியில் உள்ளவன துர்க்கையம்மன் கோவிலுக்கு பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேலாக கோவிலில் யாரும் தங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்து, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இப்போது சில தொழில்நுட்ப தகவல்களை அரசு கேட்டு இருப்பதால், அதையும் அனுப்பி இருக்கிறோம்” என்று கூறினார். ஆகவே விழுப்புரம் மாவட்டம் பாக்கம்- கெங்கவரம் காப்புக்காடு பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைய இருப்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |