இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்தராஜபக்சே ராஜினாமா செய்து இருக்கிறார். இதையடுத்து அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையில் வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் அந்நாடு பற்றி எரிந்தது.
இதற்கிடையில் அம்பன் தோட்டாவிலுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே போன்றோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும் ஆளும் கட்சி எம்.பி.அமர கீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். இந்த வன்முறைகளில் மொத்தம் 8 பேர் இறந்தனர்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில்விக்ரமசிங்கே சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தார். அதன்பின் அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் அந்நாட்டு பிரதமர் ரணில்விக்ரமசிங்கே இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் இறுதியில் அவர் தன் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.