டெல்லியில் விரைவில் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் மதுபானங்களை, வீட்டுக்குச் சென்று வழங்க டெல்லி அரசு கலால் கொள்கையில் திருத்தம் செய்து அனுமதி அளிக்க உள்ளது. ஆனால் புதிய கலால் கொள்கை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது. அது விரைவில் அமலுக்கு வரலாம் எனவும், இந்த மாதம் நடைபெற உள்ள டெல்லி கலால் விதி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறுகின்றனர்.
டெல்லியில் அரசாங்க நடைமுறைகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் கலால் கொள்கையை அறிவிப்பது முக்கிய நடைமுறையாகும். கடந்த சில ஆண்டுகளாக அதில் எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே இருந்த நிலையில், 2021-ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டது. அதில் டெல்லியில் உள்ள எல் -13 உரிமம் பெற்ற மதுபான கடைகள், ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்தால், வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யலாம்.
ஆனால் விடுதிகள்,ஹோட்டல்கள் மற்றும் நிறுவனத்திற்கு மதுபானம் விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. டெல்லியில் மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் சலுகைகள் வழங்குவதில், அவ்வப்போது கட்டுப்பாடுகள் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறன. கொரோனா ஊரடங்கு நேரத்தில் கூட இவர்கள் அதிக சலுகைகளை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது அதற்கும் கடிவாளம் போட்டுள்ள டெல்லி அரசு அதிகபட்சம் 25 சதவீதம் வரையில்தான் மதுபானங்களுக்குச் சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கலால் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஊர்டங்கு காலத்தில் ஸிவிகி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்தன. எனவே டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் தனியார் மதுபான கடை உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.