கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூரில் கிருஷ்ணமூர்த்தி(55) என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ் பேசத் தெரியாத 4 வாலிபர்களும் இந்தியில் பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணமூர்த்தி கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் ஒரு வாலிபரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தூணில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். அப்போது அந்த வாலிபரின் சட்டை பையில் ஒரு செல்போன் எண் இருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு கிராமத்தில் இந்தி பேச தெரிந்த ஒருவர் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய ஒருவர் அந்த வாலிபரை விட்டுவிடுங்கள்; அவருக்கு ஏதாவது ஆனால் உங்களை சும்மா விட மாட்டோம் என மிரட்டியுள்ளார்.
இதன்மூலம் 4 பேரும் கிராமத்திற்கு திருட வந்தது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வடமாநில கொள்ளையர்களால் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.