அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதற்கிடையில் முட்டல் நடுநிலைப் பள்ளி எதிரில் மண் சாலையில் அமர்ந்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் கோஷம் எழுப்பினர்.
இது குறித்து அறிந்த ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது எங்கள் ஊருக்கு சாலை, பேருந்து வசதி இல்லாததால் இங்கு வசிக்கும் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் எங்கள் ஊரில் வசிக்கும் வாலிபர்களுக்கு பெண் கிடைப்பது அரிதாக இருக்கிறது குற்றம் சாட்டினர். அதற்கு உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என உதவி கலெக்டர் உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.