விலவூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இரண்டு பேர் காயம் அடைந்ததால் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே இருக்கும் விலவூர் பேரூராட்சி கூட்டமானது நேற்று காலை 11 மணியளவில் தலைவர் பில்கான் தலைமையில் தொடங்க ஜெசி றோஸ்லின் அன்பு ராணி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள். இதையடுத்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திமுக மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பார்க்க வேண்டும் என கூறியதை அடுத்து திமுக கவுன்சிலர்களான பிரைட்சிங் மற்றும் ஜூட்ஸ் பெர்லின் இடையே கைகலப்பு ஏற்பட்டு பிறகு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
இதையடுத்து இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரணை செய்தார்கள். இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த கூட்டத்தில் எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். ஆகையால் இந்த கூட்டத்தில் எங்கள் கையெழுத்து இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என செயல் அலுவலர் எழுதிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டமானது இரவு 8 மணி வரை நீடித்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 8.30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றார்கள்.