காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் பபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை காவலரான மகாராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பபினா 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து பபினா தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று பபினா காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பபினாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பபினா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.