புதுக்கோட்டை அருகே 9 மாத ஆண் குழந்தையை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயல் என்ற கிராமத்தில் காடப்பன் மற்றும் செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதியினருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த ஆண் குழந்தையை பிறந்து 4 நாட்கள் கழித்து 5,00,000 ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தம்பதியினர் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர். அப்போது அவர்கள் வீடு பூட்டி கிடந்தது. இருவரும் எங்கேயோ தலைமைறைவாகி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருமயம் காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.