தமிழகத்தில் பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவன்மார்கள் உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல் என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். பெண்ணுரிமையை போற்றி பாடுகின்ற தமிழகத்தில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பிறகு கணவனுக்கு அடிமை, பின் மகனுக்கு அடிமை என்னும் பழமை வாதத்தை நோக்கி செல்வது போல் உள்ளது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது என்பது, இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.
மகளிர் உரிமை குறித்து அடிக்கடி பேசும் முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு உரிமைத் தொகை என வாக்குறுதி அளித்த முதல்வர் உண்மையிலேயே மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால் இதில் உடனடியாக தலையிட்டு மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள்,அடியாட்கள் மட்டுமல்லாமல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது அடியாட்கள் தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபுறம் பெண்ணடிமையை பற்றி பேசிக்கொண்டே மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது”படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்”என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.