நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டு மூலமாக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை மக்கள் பெறுகிறார்கள். ஒருபுறம் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் மற்றொருபுறம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பொது மக்களுக்கு வழங்குவதில் மோசடிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான அளவில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருவதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அப்போது முக்கியமான அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அடுத்து ரேஷன் கார்டுகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதனை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை வெளியாகியது. ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பில் இருந்து பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. உணவு விநியோக சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு தரப்பில் இருந்து இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் பொருள்கள் எடை குறைவாக வழங்கப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் எலக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்கப்படும். அதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருட்களை வினியோகம் செய்யும் மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பே ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.