சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கேரள வாலிபரான அஜய் என்பவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் அஜய்யும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆசை வார்த்தைகள் கூறி அஜய் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் அஜயை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.