இங்கிலாந்தில் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சுமார் நான்காயிரம் கிலோ குப்பைகளை போட்டு விட்டு சென்றதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் நகரத்தின் ஸ்வான்சீ என்னும் பகுதியில் இருக்கும் தன் வீட்டை லீ லாக்கிங் என்ற நபர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த நபர் வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் நான் உங்களிடம் கொடுத்த 400 பவுண்டுகள் முன்பணத்தை வைத்து வீட்டை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டை பார்க்க சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறைகள் முழுக்க குப்பைகள் கிடந்திருக்கிறது. பழைய துணிகள், பொருட்கள், உணவு பொட்டலங்கள், பாட்டில்கள் என்று வீடு முழுக்க குப்பைக் கூளமாக இருந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் சமையலறையில் அதிக நாட்களான சாப்பாடு, கழிவறையில் பூனையின் கழிவுகள் குவிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் மூழ்கிவிட்டார் லீ லாக்கிங்.
இப்படி வீடெங்கும் குப்பைகள் நிறைந்து கிடக்க, அந்த நபர் எங்குதான் படுத்து தூங்கினார் என்று தான் தெரியவில்லை. லீ லாக்கிங், வாடகை ஒப்பந்தம் செய்ய ஒரு ஏஜென்ட் நிறுவனத்தை அணுகி இருக்கிறார். ஐந்து வருடங்களாக 12% பணத்தையும், வாட் வரியையும் வாங்கிக்கொண்டு இறுதியில் அந்த நிறுவனம் கைவிட்டதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் தெரிவித்ததாவது, நாங்கள் வாடிக்கையாளர் புகாரை எடுத்துக் கொள்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான புகாரின் படி, விசாரணை மேற்கொள்வோம் வீட்டு உரிமையாளருடன் சேர்ந்து சுமூக தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறது.