திருச்சி மாவட்டத்திலுள்ள மேலப்புலிவார்டுரோட்டில் தனியார் பஸ்- கார் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் இருந்து சிங்காரத்தோப்பு வரை செல்லும் ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் காரணமாக அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மேலபுலிவார்டுரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே சென்று கொண்டிருந்த கார் பஸ்சின் பக்கவாட்டின் மீது மோதியதால் பஸ் டிரைவருக்கும் கார் டிரைவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் பஸ் டிரைவர் பஸ்ஸில் இருந்து இறங்கி நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேருந்தில் பயணித்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.