குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் விஷ்ணு, மணிமேகலை, கலியன் உள்ளிட்ட 7 பேர் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமேகலை, விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரியசாமியின் உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விருதாச்சலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெரியசாமியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெரியசாமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.