சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பெண் அரசு பேருந்து கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை அரசு பேருந்து ஒன்று விருத்தாச்சலம் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் கதிர்வேல் என்பவர் ஓட்டுநராகவும், மணிகண்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணிக்கும், கண்டக்டருக்கு இடையே சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் பாலக்கரையில் இறங்கி அந்தப் பெண் நடந்த சம்பவத்தை தனது ஆதரவாளர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். இதற்கிடையில் அரசுப்பேருந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு சென்றதும் அங்கு பயணிகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்தப் பெண் ஆட்டோவில் தனது ஆதரவாளர்களுடன் வந்து பேருந்தில் ஏறி கண்டக்டர் மணிகண்ணனை திட்டி தாக்கி அதே ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். இதைப்பார்த்து பேருந்து ஓட்டுனர், பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தகவல் அறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் ஜங்ஷன் ரோட்டில் மறியலில் ஈடுபட்டார்கள். இதற்கிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரை விட்டு விட்டு சென்றார்கள்.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஓட்டுநர் கதிர்வேல், கண்டக்டர் மணிகண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது கண்டக்டர் மணிகண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். அதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒருவருக்கொருவர் நெட்டி தள்ளி கொண்டார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது திடீரென்று கனமழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதுகுறித்த விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அரசு பேருந்துகளை ஊழியர்கள் விருத்தாசலம் அரசு பேருந்துகள் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். மேலும் இதைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பேருந்து இயக்காததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.