சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை தடுப்பு சுவரில் விபத்தை தவிர்த்த ஓட்டுநரை பயணிகள் பாராட்டியுள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்து ஒன்று போளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து செங்கல்பட்டு பச்சை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு பேருந்து வேகமாக சென்றது. இதனால் பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் பேருந்து டிராக்டர் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பிரேக் பிடிக்க முடியாமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றது. உடனடியாக முருகன் சாதூர்யமாக செயல்பட்டு சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து சாதூர்யமாக செயல்பட்ட முருகனை பயணிகள் பாராட்டியுள்ளனர். அதன்பிறகு மாற்று பேருந்து மூலம் பயணிகள் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் விபத்தில் சிக்கிய பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து டீசல் கொட்டியதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பிறகு விபத்துக்குள்ளான பேருந்தை போக்குவரத்து கழக ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.