மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் அகிலன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மதன்குமார்(27) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் மதன் குமாரின் மனைவி கோயம்புத்தூர் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மதன்குமார் தனது மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் தேவிபட்டினம் சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் தாராபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அதே சமயம் வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது நண்பர்களான ஜெகதீஸ், மணிகண்டன், மலரவன் ஆகியோருடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் காளியாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் காளியாபுரம் பிரிவு அருகே சென்றபோது நண்பர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அகிலன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அகிலன், மதன்குமார், மோகன்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டன், மலரவன், ஜெகதீஸ் மூன்று பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.