பாலியல் துன்புறுத்தல் பற்றிய வழக்கு விசாரணையின்போது, முத்தம் இடுவது இயற்கைக்கு மாறான குற்றமல்ல என்று மும்பைஉயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. அதாவது 14 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு விசாரணையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் கீழ் முத்தமிடுவதும், காதலிப்பதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய பம்பாய் உயர்நீதிமன்றம் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் கூறியதாவது, ”பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் முதல் தகவல் அறிக்கையில், சிறுவனின் அந்தரங்க பாகங்களை தொட்டதாகவும், உதட்டில் முத்தமிட்டதாகவும் தெரிவிக்கிறது.
என் பார்வையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் கீழ் முத்தமிடுவது கடும் குற்றமல்ல” என்று கூறினார். இந்த வழக்கில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், சிறுவனின் தந்தை தன் அலமாரியில் வைத்து இருந்த பணத்தைக் காணவில்லை எனவும் அது தொடர்பாக விசாரித்தபோது ஆன்லைன் கேமை ரீசார்ஜ் செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு பணம் கொடுத்ததாக அவரது மைனர் மகன் அவர்களிடம் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்நபர் ஒருமுறை அவனை முத்தமிட்டதாகவும், அவனது அந்தரங்க உறுப்பைத் தொட்டதாகவும் சிறுவன அப்போது தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை காவல்துறையினரை அணுகி போக்சோ சட்டம் மற்றும் பிரிவு 377 கீழ் வழக்குப்பதிவு செய்தார். இருப்பினும் சிறுவனின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதிசெய்யப்படவில்லை என நீதிபதி பிரபுதேசாய் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் முன்பே ஒரு ஆண்டு காவலில் இருந்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அத்துடன் ரூ.30,000 ஜாமீன் தொகையை வழங்குமாறு குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.