யு-19 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து ப்ளேட் காலிறுதிப் போட்டிகள், சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்துவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஹார்வி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சக்சேனா 14 ரன்களிலும், திலக் வர்மா 2 ரன்களிலும், கேப்டன் பிரியம் கார்க் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது. இதையடுத்து தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் – துருவ் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டது.
சிறப்பாக ஆடிய யஷஸ்வி அரைசதம் கடந்து 82 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து துருவ் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 144 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர் வந்த சித்தேஷ் வீர் – அதர்வா இணை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சித்தேஷ் வீர் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ரவி பிஷ்னோயுடன் இணைந்து அதர்வா அதிரடி ஆட்டத்திற்கு மாறினார்.
இவர்களால் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. ரவி பிஷ்னோய் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். 49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 222 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
கடைசி ஓவரில் அதர்வா சிக்சர் அடித்து தனது அரைசதத்தைக் கடக்க, அடுத்த பந்தில் கார்த்திக் தியாகி ரன் அவுட் ஆனார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இறுதிவரை களத்திலிருந்த அதர்வா சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பாக கெல்லி, முர்பி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்