மது அருந்துவதை தட்டி கேட்ட மனைவி மீது தீ வைத்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும் குருநாதன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதன் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வந்ததால் தங்கம் இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குருநாதன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தங்கம் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனால் தங்கம் அலறித் துடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குருநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.