தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2022 அன்று முடிவடைவதைத் தொடர்ந்து காலியிடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி
தேர்தல் அறிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் மே 24ஆம் தேதி.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31ம் நாள்,
வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் நாள் ஜூன் 1,
வேட்பு மனுக்களைப் திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 3,
வாக்குப்பதிவு நாள் ஜூன் 10
வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 10 மாலை 5 மணி முதல்
தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் ஜூன் 13
தேர்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் துணை செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மே 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்க வேண்டும். வங்கி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட 28 மற்றும் 29 நாட்களை தவிர பிற நாட்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தேவைப்படின் வாக்குப் பதிவு சட்டமன்ற குழுக்கள் அறையில் ஜூன் 10 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.