டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாகத் திகழவேண்டும் என்றால், இந்த நான்கு பட்டங்களைக் கைப்பற்றவேண்டும். ஆஸ்திரேலியன் ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கையும் கைப்பற்றினால் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே வலம் வரலாம். இதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடக்கும்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரைக் கைப்பற்றவேண்டும் என அனைத்து வீரர்களும் முழுமையான திறனை வெளிப்படுத்துவார்கள். இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரினைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், இதனை 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வயசான போதும், அசால்ட்டாகக் கைப்பற்றி ராஜாவாக வலம் வந்தவர், ரோஜர் ஃபெடரர். ஆனால், 2019ஆம் ஆண்டில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றாததால், நடால் மற்றும் ஜோகோவிச் ஃபெடரரை மிஞ்சிவிட்டார்கள் என டென்னிஸ் உலகம் பேசத்தொடங்கியது. ஆனால், ஃபெடரர் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகப் போராடியே தோல்வியடைந்தார்.
தற்போது 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடந்துவருகிறது. இதன் மூன்றாவது சுற்றில் மில்மேனை எதிர்த்து ஆடும்போது ஐந்தாவது செட்டில் தான் வெற்றியைக் கைப்பற்றினார், ஃபெடரர். அதேபோல் நான்காவது சுற்று ஆட்டத்தில் நான்காவது செட்டில் தான் வெற்றியைக் கைப்பற்றினார், ஃபெடரர். இந்த இரு போட்டிகளுக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் ஃபெடரர் இந்த இரு போட்டிகளிலும் முதல் செட்டை இழந்து, அதன் பின் மீண்டு வென்றார்.
இந்நிலையில் இன்று காலிறுதி ஆட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரனை எதிர்த்து ரோஜர் ஃபெடரர் ஆட, ரசிகர்கள் ராட் லேவர் அரேனாவில் ஆர்ப்பரித்தனர்.
முதல் செட் ஆட்டத்தில் வழக்கம்போல் அல்லாமல் ஃபெடரர் 6-3 என்ற செட்டில் முன்னிலைப் பெற்றார். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் 6-2, 6-2 என ஃபெடரர் பின்னடைந்தார். இதனால் ஃபெடரரின் வயது குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் தலைதூக்கியது.
சாண்ட்கிரன் ஒரு செட்டைக் கைப்பற்றினால் தனது வாழ்நாளில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் கால்பதிக்கலாம். கண்ணுக்கு அருகில் வெற்றி உள்ளது. ஆனால் ஃபெடரரிடம் வெற்றிபெறுவது எளிதானதல்ல.
டென்னிஸ் போட்டிகளில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால், கடைசி மேட்ச் புள்ளிகள் வரைக்கும் நாம் நின்று போராடிடலாம். நான்காவது செட் ஆட்டம் தொடங்கியது. 3-3 என்ற புள்ளிக்கணக்கில் இரு வீரர்களும் சரிசமமாக போராடுகின்றனர்.
சாண்ட்கிரன் 5 புள்ளியைப் பெறுகிறார். துரத்திவந்து ஃபெடரரும் 5-5 என சமன் செய்கிறார். இதேபோல் 6-6 என்ற நிலை ஏற்பட்டு ஆட்டம் டை ப்ரேக்கர் வரை செல்கிறது. டை ப்ரேக்கரிலும் ஆட்டம் 6-6 என்று வந்து நிற்கிறது. சிறு ஓய்வுக்குப் பின், மீண்டும் ஆட்டம் தொடங்குகிறது. ரசிகர்கள் அனைவரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அரங்கினை அதிர வைக்கின்றனர்.
ஃபெடரர் முன்னேறுகிறார். இறுதியாக 10-8 என டை ப்ரேக்கரில் வென்று நான்காவது செட்டை 7-6 (10-8) கைப்பற்றுகிறார். ஆட்டம் டிசைடரை நோக்கி செல்கிறது. ஐந்தாவது செட் ஆட்டம் தொடங்கத்திலிருந்தே ஃபெடரர் முன்னிலையில் இருக்கிறார்.
நான்காவது செட்டில் வெற்றிக்கு அருகிலிருந்து செட்டை இழந்தது சாண்ட்கிரன் முகத்தில் எதிரொலித்தது. நான்காவது செட் ஆட்டம் கொடுத்த நம்பிக்கை, ஃபெடரரை ஐந்தாவது செட்டில் ஆக்ரோஷமாக செயல்பட வைக்கிறது. இறுதியாக ஃபெடரர் என்னும் யுகவீரன் 6-3 என ஐந்தாவது செட்டினைக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.
போட்டி முடிந்து ஃபெடரர் பேசுகையில், ” எனக்கு சில நேரங்கள் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. 7 மேட்ச் பாய்ன்ட்களை எதிரில் ஆடுபவர் இழப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. என்னுடைய செர்வ்கள் எனக்கு சாதகத்தை ஏற்படுத்தின. எனது டென்னிஸ் கரியரில் நான் ஒருபோதும் எனது ட்ரெயினரை அழைத்ததே இல்லை. அதனால் தான் காயமடைந்தபோதும் ட்ரெயினரை அழைக்கவில்லை. அதற்கான காரணம் எனது பலவீனமாக இருந்துவிடக்கூடாது என்னும் சிந்தனையாக இருக்கும். அதேபோல் அதிசயம் நடக்கும் என எதிர்பார்த்தேன்” என்றார்.
ஒவ்வொரு போட்டியிலும் போராடி வெற்றிபெறும் ஃபெடரர், இந்த ஆண்டின் ஆஸ்திரேலியன் ஓபனைக் கைப்பற்றுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
"I think I got incredibly lucky."
Luck or not, here's how @rogerfederer assessed his performance to advance to the #AO2020 semifinals.#AusOpen pic.twitter.com/MK8UDBxT9o
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020