சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியில் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு சாதிசான்றிதழ் தேவைப்படுகின்றன. அதற்காக இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதிலும் இவர்கள் விண்ணப்பித்தார்கள். ஆனால் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் நேற்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு சாதி சான்றிதழ் வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் உங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார்.இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.