கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகில் மடம் பகுதியில் வசித்து வருபவர் மேஸ்திரி முனிராஜ். இவருக்கு வினிதா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளார்கள். வினிதா நேற்று தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த போது வாசலில் நின்ற காவல்துறையினர் வினிதா வைத்திருந்த பையை சோதனை செய்ய கேட்டார். அப்போது வினிதா பையிலிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார்.
இதனையடுத்து மண்எண்ணெய்யை மகள் மற்றும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வினிதாவிடமிருந்து கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அதன் பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, வினிதாவுக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்திற்கு செல்வதற்கு பாதை வேண்டும். இதற்காக அவருடைய நிலத்திற்கு அருகே அரை ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க திட்டமிட்டு அதே பகுதியில் வசித்தவர்களிடம் நிலத்திற்காக ரூபாய் 10 லட்சம் கிரைய தொகையை கொடுத்துள்ளார். ஆனால் ஒரு வருடமாகியும் முனிராஜ், வினிதாவிற்கு நிலத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை.
இது குறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தீக்குளிக்க முயன்றுள்ளேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் விசாரணைக்காக தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.