குடிபோதையில் ஓட்டுநர் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் இ.மண்டகப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன்(56). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் நேற்று மதியம் 2.30 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து தடம் எண் 281 என்ற அரசு பேருந்தை சென்னையை நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது அந்த பேருந்தில் சிவகத்துல்லா என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்தப் பேருந்தில் 40 பயணிகள் பயணித்தார்கள்.
அப்போது தியாகதுருகத்தில் புக்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது ஓட்டுநர் கன்னியப்பன் நிலைதடுமாறி பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சத்தம் போட்டார்கள். இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டார். அதன்பின் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் பயணிகள் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கும் காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து மாற்று ஓட்டுநர் இளையராஜா என்பவர் மூலம் அரசு பேருந்து சென்னைக்கு தாமதமாக கிளம்பி சென்றது. குடிபோதையில் அரசு பேருந்தை ஒட்டுநர் தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.