பட்டா மாற்றம் செய்ய ரூ10,000 லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரத்தில் வசித்து வருபவர் ஜோசப்(40). இவர் கவரை கிராமத்தில் இருக்கின்ற தனது வீட்டினை அளந்து பட்டா மாற்றம் செய்ய செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் வட்ட நில அளவை சார் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 35 வயதுடைய அன்புமணி என்பவரை அணுகியுள்ளார். அப்போது அவர் பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ 10,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஜோசப்பிடம் நில அளவை சார் ஆய்வாளர் அன்புமணி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜோசப் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை நேற்றுமுன்தினம் ஜோசப்பிடம் கொடுத்து அன்புமணியிடம் கொடுக்குமாறு கூறினார். இதனையடுத்து ஜோசப் செஞ்சி – விழுப்புரம் ரோட்டில் உள்ள ஒரு கடை அருகில் அன்புமணியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் இன்ஸ்பெக்டர்கள், அருண்ராஜ், அன்பழகன், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ் ஆகியோர் கையும் களவுமாக அன்புமணியை பிடித்து தாலுகா அலுவலகத்திற்கு கூட்டி வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.