பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் செல்போன் எண்ணை மொபிக்விக் என்ற செயலியுடன் இணைத்து சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்துள்ளார். அப்போது மேகலாவின் வங்கி கணக்கிலிருந்து 967 ரூபாய் பிடித்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்நிலையில் மேகலா அந்த தொகையை மீண்டும் தனது வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக கடந்த 13-ஆம் தேதி தந்தையின் செல்போன் மூலம் மொபிக்விக்கின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தேடிய போது கிடைத்த ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பேசிய மர்ம நபர் எனிடெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கிரெடிட் கார்டை அதில் ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மேகலா எனிடெஸ்க் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் ஸ்கேன் செய்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரத்து 652 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேகலா மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.