வடகொரியாவில் சுமார் 14.8 லட்சம் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த 12-ஆம் தேதியன்று கிம் ஜாங் உன் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு நேற்று ஒரே நாளில் 2,69,510 மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, வடகொரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 56-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.8 லட்சமாக அதிகரித்திருக்கிறது. வடகொரியாவில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
எனவே காய்ச்சல் ஏற்பட்டவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை அரசு தெரிவிக்கவில்லை. எனினும் நாட்டில் மர்ம காய்ச்சலை விட கொரோனா தொற்று அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட மக்களை தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது வரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 910 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.