நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக திருச்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் உபயோகமற்று கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை விலை கொடுத்து வாங்கும் “தி மணி பின்” என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலமாக சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு பணமாக்கப்படுகிறது. இதன் மூலமாக நகரின் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்க முடியும். அதுமட்டுமின்றி குடியிருப்புவாசிகள் உபயோகமற்ற பொருட்களை சேகரித்து அதை மாநகராட்சி ஊழியர்களிடம் முறையாக ஒப்படைப்பதால் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாயும் கிடைக்கும். அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிலோ பழைய பொருட்கள் போட்டால் அதற்கு 12 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.