தமிழக அரசின் பல துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அவற்றில் நேர்முக பணி இடங்களின் எண்ணிக்கை 116, நேர்முக அல்லாத பணியிடங்கள் எண்ணிக்கை 5,413 ஆகும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு பிப்ரவரி 23 முதல் துவங்கி மார்ச் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்றவராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இத்தேர்வின் மொத்த மதிப்பெண் 300. இதில் 90 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக கருதப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் குரூப்-2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது, மே 21 ஆம் தேதி நடத்தப்படும் முதல் நிலை தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் அறிவிக்கப்படும். ஒரு பணி இடத்திற்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் குரூப்-2தேர்வை 79,000 நபர்கள் தமிழில் எழுத விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 11.78 லட்சம் பேர் குரூப்-2 தேர்வெழுத விண்ணப்பித்து இருக்கின்றனர்.
தமிழகம் முழுதும் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப்-2 தேர்வானது நடைபெற இருக்கிறது. இவற்றில் சென்னை மட்டும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வெழுத இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ள சூழ்நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். தேர்வு 9:30 மணி முதல் 12:30 மணி வரை என 3 மணிநேரம் நடைபெறும். 8:30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறைக்கு வரவேண்டும். ஆனால் 9 மணிக்குப் பின் வரும் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.