Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு  ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில்  சுகாதாரமற்ற இறைச்சி  மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஹூபெய் மாகாணத்தில் பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பஸ், ரயில் என பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, 5 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு மருத்துவ வசதிகளை மேற்கொண்ட போதிலும், வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை என சீன அரசு கைவிரித்து விட்டது.  இதுவரை வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக அதிகரித்துள்ளது. 2,567 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 563 பேரின் நிலைமை மோசமாகவும், 127 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவும் இருப்பதாக ஹூபெய் மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இம்மாகாணம் முழுவதும் 32,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீடியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பீஜிங் விமானம்நிலையம், ரயில் நிலையம் மற்றும் போக்குவரத்து நிலையங்களிலும்  வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு  பயணிகள்   பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர் ,காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

சீனாவில் இருந்து வருபவர்களை பல்வேறு நாடுகள் முழு உடல் பரிசோதனை செய்து வருகிறது. இதற்கிடையே, சீனாவில் 700 இந்திய மாணவர்கள் தங்கி மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். அவர்கள் பலர் விடுமுறைக்காக நாடு திரும்பினாலும், வுகான் நகரில் 250 முதல் 300 மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அங்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால் அவர்களை  இந்தியா அழைத்து வர மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக மும்பையில் இருந்து 423 இருக்கைகள் கொண்ட ஏர் இந்தியா ஜம்போ விமானம் தயார் நிலையில் உள்ளது. ஹூபெய் மாகாணத்தில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கான பணிகள்  தொடங்கப்பட்டுள்ளன.

 

Categories

Tech |