உலகம் முழுதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்கள் வேலை, வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பங்குசந்தை சரிவு, உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. முன்பே வேலையின்றி அவதிப்பட்டு வந்த சமயத்தில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்த கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் பதவியை மகிந்தராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை நாட்டின் புது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது பேசிய ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
கடந்த மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. விமான நிறுவனம் எதிர்கொண்டு இருக்கும் நஷ்டத்தை ஈடுசெய்ய இந்நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தர ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதால் நாட்டின் நாணய மதிப்பானது மேலும் சரிவடையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் இருக்கிறது. இதற்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். ஆகவே அதற்கு தேவையான பணத்தை திரட்டவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.