ஆந்திர அரசின் நலத் திட்டங்கள் சென்றடைகிறதா என அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடுவீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு வீட்டுக்கே நலத்திட்டங்கள் என பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை மந்திரியும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல எனும் கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாகச் சென்று அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கிறதா என்று விசாரித்தார்.
அப்போது முதியவர் ஒருவரைப் பார்த்து, உங்களுக்கு பென்சன் கிடைக்கிறதா..?’ என கேட்டார். அதற்கு அவர் பென்சன் கிடைக்கிறது என்றும் மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனரா.? மனைவிக்கு என்ன வயது? என்று ரோஜா கேட்டார். அப்போது அந்த முதியவர் எனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததுதான் பிரச்சினையாக இருக்கிறது.
ஆகவே எனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். இதனால் அதிர்ந்து போன ரோஜா “குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் வரவில்லை எனில் அதற்கு தீர்வுக்காணலாம். ஆனால் உங்களுக்கு நான் எவ்வாறு திருமணம் செய்துவைக்க முடியும்..? என சிரித்தபடி கேட்டுக்கொண்டே அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார். இவ்வாறு முதியவரின் வித்தியாசமான வேண்டுகோள் மந்திரி ரோஜாவுடன் வந்த மற்றவர்களையும் சிரிக்க வைத்தது.