அமெரிக்காவின் நதி கரையோரம் அமைந்திருந்த படகு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும், சிலர் வாரதின் இறுதி நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வாடகைக்கு தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 : 40 மணிக்கு இங்குள்ள ஒரே ஒரு படகு வீட்டில் எதிர்ப்பராதவிதமாக திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த படகு வீடுகளுக்கும் தீ சரரசவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர்.
இந்த தீ விபத்தில் 35 படகு வீடுகள் எரிந்து ஆற்றில் மூழ்கியது.இதில் இருந்த சிறு குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக படகு வீடுகளில் இருந்த 7 பேர் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். இந்த தீவிபத்து எப்படி நிகழ்ந்ததது, என்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.