பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூர் வ உ சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வருடத்தில் ஆட்சிய அரும்பணிகளின் தொகுப்பு, ஓவிய வடிவங்களின் கண்காட்சி போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இந்த வருடத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் தூத்துக்குடி மாவட்டம் சிவகிரி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், – கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – துளுக்கார்பட்டி, தர்மபுரி மாவட்டம் – பெரும்பாலை போன்ற ஏழு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
கீழடியில் புதைந்து இருக்கின்ற கட்டட பகுதிகளையும், அதன் பொருட்களையும் வெளிக்கொணரும் வகையில் பெரும்பரப்பு அகழாய்வு நேர்த்தியுடன் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கிமு ஆறாம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது என்பது தெளிவாக தெரிகின்றது. இவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டடத் தொழில் நுட்பம் போன்ற தலைப்புகளின் கீழ் கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சிவகளை வாழ்விட பகுதி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ஆதன்’ என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கீழடியில் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓட்டில் நினைவுபடுத்துகிறது. சிவகளையில் கிடைக்கப்பெற்ற கருப்பு சிவப்பு வண்ண கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரையப்பட்டுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை பார்க்கும்போது சிவகலை பகுதியில் வாழ்ந்த தமிழ் சமூகம் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த ஆய்வு செய்ததில் இதனுடைய காலம் கிமு 1155 என வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த காலக்கணிப்பின் மூலமாக பொருநை ஆற்றின் கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினர் மேம்பட்ட பண்பாடு 3200ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உமி நீங்கிய நெல்லின் வழி பெறப்பட்ட காலக்கணக்கீடு நிலைநிறுத்தி இருக்கின்றது. இந்த வகையில் இவற்றை விளக்கும் விதமாக தொல்பொருட்கள் முதுமக்கள் தாழிகள் மற்றும் அகழாய்வு குழி மாதிரி மற்றும் அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் இந்த பகுதியின் தொடக்ககால குடியேற்றத்தை அறிந்து கொள்வதும் ஈமக்காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டு இருக்கின்ற அந்த கால மக்களின் வாழ்விடங்களை அடையாளம் காண்பதே ஆகும்.
தற்போதைய அகழ்வாராய்ச்சி என்பது நீண்டகால கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆதிச்சநல்லூரின் பழங்கால வாழ்விடங்களை தொல்லியல் சான்றுகள் மூலமாக அடையாளப்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை இளைய தலைமுறையினர் மற்றும் பொது மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ் இணைய கல்வி கழகம் இணைந்து கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் அரசின் முக்கியமான திட்டங்களை ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற அரசின் ஓராண்டு சாதனைகளை நேர்த்தியாக ஓவியங்களாக அழகுற உருவாக்கியிருக்கின்றன. இதன் மூலமாக அனைத்து தரப்பினரும் அரசின் திட்டங்களை எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கண்காட்சி இன்று முதல் அனைவரும் இலவசமாக கண்டு மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.