தமிழ்நாட்டில் சென்ற 2 ஆண்டுகளுக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தமிழகத்திலுள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் 1-9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அந்த வகையில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், ஜூன் 17 முதல் தொடங்க இருக்கிறது. மீதம் உள்ள ஆசிரியர்கள் ஓய்வில்தான் இருப்பார்கள்.
இந்த நிலையில் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு போகும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்காத நிலை இருக்கிறது. ஆகவே கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்க பொதுச்செயலர் நந்தகுமார், பள்ளிக்கல்விதுறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழக அரசு அறிவித்தபடி 1-9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகளை திறந்து படிப்பை உறுதிசெய்திட வேண்டும்.
முன்பே கொரோனா தொற்று காலக்கட்டத்தில் பெரும்பாலான நாட்களில் மாணவர்கள் வீட்டில் இருந்ததால் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. ஆகவே அந்த தவறு மீண்டும் நடைபெறகூடாது. இதன் காரணமாக அரசு அறிவித்தபடி காலதாமதம் இன்றி உடனே வருகிற கல்வி ஆண்டு பள்ளியை தொடங்கிட வேண்டும். இதற்கு பெற்றோரும், மாணவர்களும், பள்ளிநிர்வாகிகளும், ஆசிரியர்களும் தயாராக இருக்கின்றனர். எனவே திட்டமிட்டவாறு பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் கோடை விடுமுறை மேலும் 2 வாரகாலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.