தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மே 18 இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில்முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மாலை கார் மூலம் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து உதகை மற்றும் குன்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த பயணத்தின் போது உதகையில் தோடர் இன மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாக உதகையில் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “உதகையில் நான் கேட்ட குரல் “நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!”. அதிலும் ஒரு பெண், “நான் கருவுற்று இருக்கிறேன் வாழ்த்துங்கள்” என்று கேட்டபோது மனம் உருகினேன். மேலும் என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.