உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன் அறிவழகனிடம் வேலைக்கு செல்லாமல் வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் மது குடித்துவிட்டு தீபனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் அறிவழகன் தீபனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தீபனின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தீபனின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் காவல்துறையினர் தீபனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீபனின் மனைவி ஹிதிஜித்வம் சல்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.