பொருநை கண்காட்சி, ஓவியக்கண்காட்சி வ. உ. சி மைதானத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் பொருநை கண்காட்சி, ஓவிய கண்காட்சிதொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கம்தென்னரசு, தா.மோ. அன்பரசன்,மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பெங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கலெக்டர் சமீரன், ஆ.ராசா எம்.பி., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், முன்னாள் எம்.பி நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சி 10,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறுகின்ற வகையில் 190 ஓவியங்கள் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் அந்த ஓவியங்கள் குறித்து விளக்கம் கூறினார்கள். ஓவியக் கண்காட்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆக பதவி ஏற்றதும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதும், கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டதும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தத்ரூப ஓவியமாக வரையப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து மு. க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கண்காட்சியினை பார்வையிட்டுள்ளார். அவருக்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததை குறித்து விளக்கினார். தமிழகத் தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அகரம், மணலூர், கொந்தகை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை,தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பங்கோட்டை,தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை, நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி, ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் மற்றும் மாதிரிகளை வைத்து மயிலாடும்பாறை சிவகளை, கீழடி, கொடுமணல், கொற்கை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும், சிறப்புகள் குறித்தும், தமிழ், ஆங்கிலத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளன. இதில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு மாதிரி, மண்பானைகள், முதுமக்கள் தாழிகளின் மாதிரிகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட சூதுபவளம் மோதிர கல், சூது பவள மணிகள், தங்கத்திலான பெத்தான், கம்மல், வளையம், ஊசி ஆகிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடுதுறையில் கிடைத்த இரும்பு பொருட்களின் கரிம மாதிரியை எடுத்து ஏ.எம்.எஸ் முறையில் காலக்கணக்கீடு செய்யப்பட்டதில் சுமார் 4,200 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இரும்பு பயன்பாடு இருந்தது உறுதி செய்யப்பட்டன. புதிய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை தொடர்ந்து வாழ்விடமாக இருந்துள்ளது.
எனவே தமிழர்களின் 4200 வருடகால வரலாற்றில் விளக்குகின்ற வகையில் அகழ்வாய்வில் கிடைத்த அம்பு முனைகள், கத்தி கோடாரி,ஈட்டி முனைகள், மூன்றுகால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், சுடுமண்ணால் ஆன பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பத்து தினங்கள் நடைபெற இருக்கின்றது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.