இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. எனவே இந்த மோசடிகளை குறைக்க வங்கியின் சார்பாக அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோசடிகளை குறைப்பதற்காக ஏடிஎம் கார்டு இல்லா பரிவர்த்தனையை கொண்டுவர ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம்களில் ஏடிஎம் கார்டு இல்லா பண பரிவர்த்தனையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தற்போது உத்தரவு வெளியாகியுள்ளது. அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையத்துடன் யுபிஐ தளத்தை ஒருங்கிணைக்க தேசிய பரிவர்த்தனை கழகத்துக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது ஏடிஎம் கார்டு இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் சில வங்கிகளில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் இதை கட்டாயம் கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் கூடுதலாக வசூலிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.