முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் தினக் கூலி தொழிலாளர்களின் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் “டெல்லி அரசு தலைநகரிலுள்ள திறமையற்ற தொழிலாளர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை டெல்லி அரசின் கீழ் இயங்கும் அனைத்து திட்டமிடப்பட்ட வேலைகளிலும் திறமையற்ற, அரை திறன், திறமையான மற்றும் இதர பணியாளர்களுக்கு பயன் அளிக்கும். இது பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட பெரிய நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அகவிலைப்படி தொகையானது சமீபத்திய திருத்தத்துடன் சேர்த்து திறமையற்ற தொழிலாளர்களுக்கான மாதஊதியத்தை ரூபாய் 16,064 லிருந்து ரூபாய் 16,506 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று அரை திறன் உடைய தொழிலாளர்களுக்கான ஊதியம் மாதம் ரூபாய் 17,693-ல் இருந்து ரூபாய் 18,187 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு மாதஊதியம் ரூபாய் 19,473-ல் இருந்து ரூபாய் 20,019 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையில் தற்போதைய தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் கூடுதலாக பணியாளர்களின் மேற்பார்வையாளர் மற்றும் எழுத்தர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மெட்ரிகுலேஷன் அல்லாத ஊழியர்களின் மாதஊதியம் ரூபாய் 17,693-ல் இருந்து ரூபாய் 18,187 ஆகவும், மெட்ரிகுலேஷன் ஊழியர்களுக்கு ரூபாய் 19,473 ல் இருந்து ரூபாய் 20,019 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பட்டதாரிகள் மற்றும் உயர்கல்வித்தகுதி இருப்பவர்களுக்கு மாத ஊதியமானது ரூ.21,184-ல் இருந்து ரூ.21,756 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது டெல்லி அரசு மட்டும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படியை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.